தமிழ் தலிபான் மனோநிலை
கடந்த காலப் புகழிலும் மனக்குறைகளிலும் கவனம் செலுத்துவது எம்மைப் பலவீனப்படுத்தும்.
ஓரினமானது அரசுகளைப் போன்று அதன் வாழ்நாளில் பல்வேறு படி நிலைகளை அதாவது இளமை ,பலம் பின்னர் சிதைவு போன்றவற்றை அனுபவிக்கிறது எனக் கூறப்படுகிறது; இக் கூற்று ஒரு பரந்த பொதுக் கருத்து போல் தோற்றினாலும் ,புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் சில பகுதியினரில் காணப்படும் தற்போதைய குழப்ப நிலை, இதனை உறுதி செய்வது போல் உள்ளது.
தமிழர் பெருமையும் தொன்மையான வரலாறும் என்ற தலைப்பில், ஈழத் தமிழ் சமூகத்தின் சில பகுதியினர் பழம் பெருமைகளையும் மனக்குறை களையும் பற்றி அடிக்கடி சிந்திப்பதையும் அல்லது அவற்றில் மூழ்கி இருப்பதையும் நான் அடிக்கடி சந்திக்க கூடியதாய் உள்ளது. இவ்வாறான உணர்வுகளைப் பரப்புகின்ற ஒழுக்க நெறியாளர் அல்லது மனக்குறைகளைத் திணிப்பதை தொழிலாக கொண்டவர்களின் செயல்பாடுகள், ஊக்கமளிப்ப தாகவோ கவனத்தை ஈர்ப்பதாகவோ இல்லை என நான் உணர்கிறேன்.
சுய அக்கறையாளர் தமிழ் சமூகத்துக்கு மிகச் சொற்பமான சேவையையே செய்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் அடிப்படையான சேவை துன்பப்படுத்தல் மட்டுமே. அவர்கள் தாங்கள் அப்பழுக்கற்ற ஒழுக்கத் தரத்தை கொண்டு இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு, பிறரிடம் அத்தரம் இல்லை என கருதுகிறார்கள். இவ்வாறான ஒழுக்க உயர்நிலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி,பிறரை ஒழுக்கம் இல்லாதவர்களாக, இதிலும் மோசமாகத் தமிழ் துரோகிகளாக மாற்றி அமைக்கிறார்கள். இதே வேளையில் தம்மை ஒழுக்க சீலர்களாகவும், கொள்கை உடையோராகவும் நினைக்கிறார்கள்.
இங்கு நான் ஒரு துறவியாக நடிக்க விரும்பவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். எனது அபிப்பிராயங்களால் நான் தவறான பாதையில் செல்ல கூடும் என்பதை மறுப்பதற்கு இல்லை. நான் ஒரு நடுத்தர வயது மனிதனாக, சுய சோதனை செய்த பின்னர் சில கடந்த கால செயல்களுக்காக வருந்துவதை ஒப்புக் கொள்கிறேன். எனது எதிரிகளை மனிதாபிமானம் அற்றவர்கள் எனக் கூறுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி, நான் நன்கு அறிவேன். இவ்வாறான செயலை தொடர்ந்தும் செய்தால், அது ஒரு சாதாரணத் தவறாக இருந்து பின்னர் பழக்கமாக மாறிவிடும்.
எனது வாழ்வின் ஒரு கட்டத்தில் எனக்கு ஒரு திடீர் விழிப்புணர்வு ஏற்பட்டது. கடந்த காலத்தில் பல பாராட்டும்படியான செயல்களைச் செய்தேன் என்பதை உணர்ந்து கொண்டேன். இதனால் எனக்கு பெருமை உணர்வு ஏற்பட்டது. மேலும் இவ்வாறான கடந்த கால வெற்றிகளால் நான் ஆனந்தம் அடைந்தேன். இதே வேளை எனக்கு இன்னும் ஓர் உணர்வு ஏற்பட்டது. அதாவது நான் கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்ததால் வாழ்வில் முன்னேறவில்லை என்பது விளங்கிற்று. இதனால் தற்காலத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் கடந்த கால நினைவுகளில் எனது சுய கர்வத்தை அதிகரிப்பதிலேயே ஈடுபட்டிருந்தேன்.
மேற்கூறிய விழிப்புணர்வின் பின்னர் தற்போதை நிலையில், நான் பெருமை அடைய கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். நான் முன்பிருந்த நிலையானது, நான் இப்போது இருக்க வேண்டிய நிலையை மறைக்கின்றது என்பதை உணர்ந்தேன். இந்த விழிப்புணர்வு எனக்கு மிகுந்த வேதனையை தந்தது. கடந்த கால நினைவுகளில் அதிகம் மூழ்கி இருப்பது. ஒருவர் எதிர்காலத்துக்கு தன்னைத் தயார் செய்வதை தடுக்கிறது. இந்த தத்துவமானது தனி மனிதனுக்கு மட்டுமல்ல நிறுவனங்கள், சமூகங்கள், நாடுகளுக்கும் பொருந்தும். முன்னேறுவதற்கு மாற்றமடைய வேண்டும். ‘கைசன்’ என்னும் ஜப்பானிய தத்துவம் தொடர்ச்சியான முன்னேற்றம் என்ற போதனையைக் கொண்டுள்ளது.
நான் அண்மையில் பிரான்சில் ஒரு தமிழ் பெண், ஒரு தமிழ் ஆண்கள் குழுவினால் தாக்கப்படும், சஞ்சலமான காணொளியை பார்த்தேன். இவ் வன்முறைக்கு அப்பெண், ஈழ விடுதலைப் போராட்டத்தையும் தியாகிகளையும் பற்றி தரக்குறைவாக பேசியதே காரணம். அப்பெண்ணின் பேச்சு இறந்தவர் களை அவமரியாதைப் படுத்துவதுடன் கோபம் ஏற்படுவதாகவும் அமைந்தி ருந்தது என்பதை, நான் வன்மையாக கண்டிக்கிறேன். எனினும் தமிழ் தலிபான்களின் கொடூரமான செயலைக் கண்டு மிகவும் வேதனை பட்டேன். எமது சமூகத்தில் அவதூறாகப் பேசிய பெண்கள் மீது அல்லது எந்த ஒருவர் மீதும் , உடல் வன்முறையை பாவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை நம்புகின்றவர்களை குறிப்பதற்கு, ‘தமிழ்த் தலிபான்கள்’ என்ற தொடரைப் பாவித்தேன். ஒட்டுமொத்த சமூகத்தையும் அல்ல என்பதை எம்மவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான வருந்தத்தக்க செயலைக் கண்டிப்பதற்குப் பதிலாக வளர்ந்தோர் பலர், பெரும்பாலும் ஈழத் தமிழ் ஆண்கள் பாராட்டுவதை, பல சமூக வலைத் தளங்களில் பார்த்து மிகவும் வேதனைப் பட்டேன். ஒரு நியாயமான கோரிக்கைக்காக, அதி உச்சத் தியாகத்தை செய்தவர்களை அவமானப்படுத்துவதாக இந்தப் போலி தேசியவாதிகளின் செயல் அமைந்திருந்தது. இச் செயலானது எம்மை நாமே துன்புறுத்தும், எமது தமிழினத்தின் வருந்தத்தக்க சரிவை, மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. நான் ஒரு தமிழனாக மிகுந்த அவமானமடைந்தேன்.
தமிழர் ஒவ்வொருவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கண்காணிக்கச் சிலர் சுய நியமனம் பெற்றிருப்பது போல் தோன்றுகிறது. இத்தமிழ் தலிபான்கள், ஒரு கால கட்டுப்பாட்டுக்குள் மாட்டுப் பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு அப்பால், கனடா போன்ற சுயாதீன சமூகங்களில், பல ஈழத் தமிழர் வாழ்கிறார்கள் என்பதை, ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது கவலைக்குரியது. தற்போது மக்கள் எவருக்கும், தாம் விரும்பியதைச் சொல்லவும் செய்யவும், அவை ஒழுங்கு ரீதியாகக் கண்டிக்கத்தக்கவையாய் இருப்பினும், சுதந்திரம் உண்டு. இவர்கள் ‘தமிழ் துரோகி’ என்ற பதத்தைத் தாராளமாகப் பாவிப்பது தமது ஒழுக்க மேலாண்மையைக் காட்டுவதற்கான வெளிவேஷம் ஆகும்.
இக்காட்டுமிராண்டிகள் அலுப்புத் தட்டும் தெருவோர அலட்டல்களை நிறுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. மேலும் இவர்களது அலட்டல்கள் தமிழ் சுதந்திரப் போராட்டத்தை வலுவாக ஆதரிக்கும் என்னைப் போன்றவர்களை அந்நியப்படுத்தும் செயலாகும். இத்துடன் இவர்கள் புகழிடத் தமிழர் எவ்வாறு வாழ வேண்டும், நடந்து கொள்ள வேண்டும், எந்த நிகழ்ச்சிகளில் அல்லது களியாட்டங்களில் பங்கு பெற்ற வேண்டும் என்று பிரசங்கம் பண்ணுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான சமூக துன்புறுத்திகள். எமது சுயமதிப்பு பற்றி எமக்கு கூறுவதையும் கண்காணிப்பதையும் நிறுத்த வேண்டும் என்பதை, நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியம். இவ்வாறான எளிய நற்பண்பு இல்லாத குண்டர்களால் அடக்கி ஆளப்படுவதை, பண்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய நாம் இனியும் அனுமதிக்க கூடாது. அவர்கள் செயல்படு வதற்கு பதிலாக அத்துமீறிச் செயல்படுகிறார்கள். இச்செயல்பாடு அவர்களின் சுய வெறுப்பின் வெளிப்பாடாகும். இவர்கள் மிகுந்த கவலையும் மனநோயும் உள்ளவர்கள். இதனால் பிறர் மீது தமது வெறுப்பை காட்டுகின்றனர்
ஈழப் போர் முடிந்து 15 ஆண்டுகள் சென்ற பின்னும். சிலர் இன்னும் அந்த ஏமாற்றமடைந்த மனோநிலையிலே வாழ்ந்து கொண்டிருப்பது கவலைக் குரியது. எமது சமூகத்தில் சிலர் இந்த நிலையை பகிர்ந்து கொள்ளுகின்றனர். இந்த இரு சாராருக்கும் எனது அனுதாபங்கள். இவர்கள் ஒரு தீவிர மதக் குழு போன்ற ஒரு குழுவின் துன்புறுத்தலாலும், தேவையற்ற பயத்தாலும் உந்தப்பட்டு, கூட்டு துன்புறுத்தப்பட்ட நிலையில் மாட்டிக் கொண்டவர்கள் போல் தென்படுகிறது. இவ்வாறான துர்ப்பாக்கிய மனோநிலை, துன்பத்தின் உச்சகட்டமான ஏற்றுக்கொள்ளுதல் நிலைக்கு, அவர்கள் முன்னேற முடியாமல் தடுக்கிறது.
அரசியல் கண்ணோட்டத்தின் ஊடாக நாம் எல்லாவற்றையும் பார்க்கக் கூடாது. மே 2009 இல் இசை ஓய்ந்ததும் ஆசனங்கள் மறைந்து விட்டதை கண்டோம். அன்று முதல். உதாரணமாக தொரொன்ரொவில் உள்ள பல்வேறு அரசியல் குழுக்கள், ஓர் ஆசனத்தை பெறுவதற்காக தம்மிடையே போட்டி போடுவதைத் தொடர்கின்றனர். இவ்வாறான அர்த்தமற்ற செயல்பாடுகள் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாத, உருப்படியான செயல்பாடுகளுக்கு வழி வகுக்காது என்பது உண்மையில் கவலைக்குரியது.
தமிழருக்கு நன்மை தருகிறதா என்பதை கருத்தில் கொள்ளாமல் ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் பிரச்சனையை கிளப்பி விடுகிறது. இவ்வாறான அற்ப விடயத்தில் ஈடுபட்டு தமது சக்தியை வீணடிக்கின்றனர். விவாசத்தை பங்கு போடும் மூடத்தனமான சதுரங்க விளையாட்டை போல, நாட்டுப் பற்றாளர் வண்டியில் தாமும் சவாரி செய்து எமது தியாகிகளின் பெயரால் நாமும் தியாகம் செய்கிறோம் என்ற போர்வையில், தமிழரின் சக்தியை இவர்கள் வீணடிக்கிறார்கள். மேலும் இவர்கள் தியாகிகளின் செயலை மதிப்பது போல் பாசாங்கு செய்து, அதை அவ மரியாதை செய்கின்றனர். அத்துடன் எமது ஒட்டு மொத்த மனச்சாட்சியையும் களங்கப்படுத்துகின்றனர். இதன் விளைவாக தனி நபர்கள் தமது விசுவாசத்தின் அடிப்படையில் ஏதாவது ஒரு குழுவுடன் கண்மூடித் தனமாகச் சேர்ந்து கொள்கி ன்றனர். எனினும் மேற்கூறப்பட்ட இரு சந்தர்ப்பங் களிலும் தமிழர் கஷ்டப்பட, ஸ்ரீலங்கா அரசு வெற்றி பெறுகிறது.
எமது மொழி மீதும் தமிழரின் கடந்த கால பெருமை மீதும் கொண்டுள்ள அதீத பற்று. இவ்வாறான மனப்பற்றாக்குறையின் விளைவாகும். இது குறிப்பாக கனடாவில், தமிழர் பாரம்பரியக் கொண்டாட்ட மாதத்தின் போது வெளிப்பட்ட எல்லை மீறிய, நாட்டுப் பற்று நிகழ்ச்சிகள், தேவைக்கு மீறியவனாக இருந்தன. இங்கு நிறைகுடம் தழும்பாது என்று விவேக வாசகம் பொருத்தமானது. தனி நபர்களையும் பண்பாடுகளையும் எல்லை மீறி நடப்பதற்கு தூண்டுவது பற்றாக்குறை உணர்வுகளே.
பெரும்பாலானவர்கள் தமது மொழி, பண்பாடு பற்றி பெருமையாக கருதுவர் இது தமிழர் ஆகிய நமக்கு மட்டும் தனித்துவமான மனப்பாங்கல்ல. இவ்வாறான பழம் பெருமை பற்றிய நினைவில் மூழ்கி இராமல், அதில் நின்றும் விலகி, தமிழராகிய நாம் ஒன்றிணைந்து எமக்கும் உலகுக்கும் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை, எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் என்பது, எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். எமது மொழியின் தொன்மை, அதன் செழுமை ஆகியவற்றை நாம் பொக்கிஷமாக கருதும் வேளையில், தற்காலத்தில் எமது பங்களிப்புகள் என்ன என்பதிலேயே, பிற உலகம் கூடிய அக்கறை கொண்டுள்ளது என்பதே, உண்மை நிலையாகும்.
வைத்தியசாலை கட்டிடங்களிலும் பல்கலைக்கழக கட்டிடங்களிலும் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை காண நான் பெரிதும் விரும்புகிறேன். மேலதிகமாகத் தமிழர் நோபல் பரிசு வென்று, விஞ்ஞான துறைகளிலும், உலக மக்களின் மேம்பாட்டுக்குக் குறிப்பிடத் தகுந்த பங்களிப்புகளை செய்வதைக் காண்பது, உண்மையிலேயே ஊக்கமளிப்பதாய் இருக்கும். இவ்வாறான ஆசைகளில் எமது கவனத்தை திசை திருப்பி, எண்ணங்களுக்கு பதிலாக விளைவுகளில் கூடிய கவனம் செலுத்துவது கட்டாயமாகும்.
இவ்வாறான தேவையற்ற கூக்குரல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் தமிழர்களாகிய நாம் எவ்வாறு ஒன்றிணையலாம் என்பதே முக்கியமானது. சுதந்திரப் போராட்டத்தில் உயர்நீத்த எண்ணற்றோருக்கு நன்றிக் கடனாகவும் அவர்களை நினைவு கூரும் முகமாகவும், எமது வேறுபாடுகளைக் களைந்து ஒன்று சேர்வதன் மூலம்,வரலாற்று ரீதியாக எமது பொறுப்பைக் காட்ட வேண்டும். எங்கெல்லாம் சுதந்திரம் உள்ளதோ, அங்கெல்லாம் தமிழர் வளம் பெறுவர் என்பதை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் இச்செயல்பாட்டுக்கு சிறந்த உதாரணமாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் திகழ்கின்றனர்.
கொள்கைகள் காலவோட்டத்தில், செயல்பாடுகளுக்கேற்ப மாற்றமடைய வேண்டும். எனினும் எமது பகுத்தறிவான சிந்தனை, எம்மை தற்காலத்திற்கு ஏற்றதாயும் பொருந்துவதாயும் அமைக்கும். வரலாற்று ரீதியாக எமது உணர்வுகளோடு செயல்படுவது, ஈழத் தமிழர்களுக்கு ஏற்றதொரு வெற்றித் தந்திரம் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கொள்கைகளை தாண்டி நல்ல விளைவுகளை நோக்கி கவனம் செலுத்துவோமாக.
இறுதியாக ஸ்ரீலங்காவில் நடந்த ஈழத் தமிழரின் படுகொலை மெதுவாக மறக்கப்படுகின்ற இவ்வேளையில், இனி வருங்கால, வலிமை மிக்க பெருமைமிக்க, தமிழ் சந்ததியினர் இதன் வரலாற்று முக்கியத்துவத்தைப் பேணி, நினைவு கூர்ந்து முன்னேற வேண்டும்.
ஏனெனில் காலம் கனிந்த மக்களின் வலிமையை எந்த தீய சக்தியாலும் எதிர்க்க முடியாது.
வாழ்க தமிழ்மொழி. வளர்க தமிழ் இனம்.
ரோய் இரத்தினவேல்
கைதி #1056
கனடாவின் தேசிய நூல் விற்பனையில் 1ஆம் இடம்